காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று வரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சியளித்து வந்த அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
நேற்று மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே இருந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இன்று அதிகாலை 5 மணியில் இருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பெரும்பாலானோர் அத்திவரதரை தரிசித்த பிறகு சாப்பிடலாம் என்று வரிசையில் காத்திருப்பதால் பலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் சாப்பிட்ட பிறகு தரிசனம் செய்ய வாருங்கள்," என்றார்.
அத்திவரதர் பெருவிழாவின் 30வது நாளான செவ்வாய்க்கிழமை அன்று அத்திவரதர் சயனக் கோலத்தில் இளம் நீல நிறப் பட்டாடை அணிந்தும் அதே நிறத்தில் அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெருமாளுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட செண்பக பூ மாலை, அத்திப்பழ மாலை, மல்லிகை, சம்பங்கி மாலைகளும் அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஜூலை முதல் தேதியிலிருந்து அத்தி வரதர் சயனக்கோலத்தில் காட்சியளித்து வந்தார்.
இன்று முதல் 17 நாட்களுக்கு அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

