புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியின்போது 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஏறக்குறைய ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகனும் 'இந்துஸ்தான் பவர் புராஜெக்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவருமான ரத்துல் புரிக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி அவர் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்புச் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வருமான வரித் துறையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில்தான், பினாமி சொத்துப் பரிவர்த்தனைச் சட்டத்தின் 24 (3)-வது பிரிவின் கீழ், ரத்துல் புரிக்குச் சொந்தமான ரூ.254 கோடி மதிப்பிலான பங்குகளை முடக்க டெல்லி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-பிடிஐ

