இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

2 mins read
d374fab8-7167-4034-96cf-6c6a924708c2
டெல்லியில் இனி 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். படம்: ஊடகம் -

புதுடெல்லி: டெல்லியில் இனி 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற் கொண்டு மக்களை திசை திருப்பும் வகையில் இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால், முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்றார்.

தற்போது டெல்லி மக்கள் 200 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.622 மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் இக்கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதே போல் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணத் தொகையில் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.

"250 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்கள் ரூ. 800 கட்டணம் செலுத்தினர். இனிமேல் ரூ.252 செலுத்தினால் போதும். 300 யூனிட் வரை பயன்படுத்தி ரூ.900 கட்டணம் செலுத்தியவர்கள் இனிமேல் ரூ.526 செலுத்தினால் போதும்," என்றார் கெஜ்ரிவால்.

மேலும், டெல்லி மக்களுக்கு இனி 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி கண்டது.

இந்நிலையில் டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த இலவச அறிவிப்பை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.