பெங்களூரு: கர்நாடகா மாநில புதிய முதல்வர் எடியூரப்பாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நாட்டில் எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் புதிய முதல்வருக்கு மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து கூறுவது வழக்கம்.
பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். ஆனால் பதவி ஏற்று ஒரு வாரம் ஆகியும் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு அப்படி ஒரு வாழ்த்தை மோடி சொல்லவில்லை. பதவியேற்பு விழாவில்கூட மேலிடத் தலைவர் என்ற வகையில் முரளிதர ராவ் மட்டுமே கலந்துகொண்டார்.
காங்கிரஸ்-மஜத அரசு கவிழ்ந்த பிறகு அதிபர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர பரிந்துரைக்கலாம் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருந்துள்ளது. மோடியும் இதையே விரும்பியிருந்தார்.
இதற்குக் காரணம், சபாநாயகரால் தகுதி நீக்கத்துக்கு உள்ளான சுயேச்சை உட்பட 17 எம்எல்ஏக்களால் நடப்பு சட்டசபை பதவி காலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் ஒன்றாகும்.
மேலும் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். ஆட்சியமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்தது 113 ஆகும். எனவே மீண்டும் தேர்தலைச் சந்தித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது மோடியின் திட்டம்.
மோடி, அமித் ஷா ஆகிய இருவரின் கோரிக்கையையும் ஏற்க எடியூரப்பா மறுத்துவிட்டார்.
ஏற்கெனவே 76 வயதாகும் நிலையில் மீண்டும் தேர்தலைச் சந்தித்து ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் போய்விட்டால் வந்த முதல்வர் வாய்ப்பும் போய்விடும் என்பது எடியூரப்பாவின் எண்ணம்.
ஆனால் இடைத்தேர்தலில் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெறமுடியாமல் போனால் அப்போது எடியூரப்பா ஆட்சி கவிழும் வாய்ப்பே அதிகம்.
இந்நிலையில், அமைச்சர் பதவிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதால் புதிய அமைச்சர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரும் 8ஆம் தேதிக்குள் அமைச்சர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

