பேங்காக்: காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்பதை அமெரிக்காவுக்கு மீண்டும் நாசூக்காக உணர்த்தியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் மட்டுமே இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், கிழக்காசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டு நடைபெறுகிறது. இதில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோவை சந்தித்துப் பேசினார்.
அப்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
''காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசுவதாக இருந்தால் பாகிஸ்தானுடன் மட்டும் தான் பேசுவோம். அதுவும் இருதரப்பு பேச்சாகத் தான் இருக்கும்,'' என்றார் ஜெய்சங்கர்.
இதன் மூலம் இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்பது மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுமாறு இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக் கொண்டால் தாம் தலையிடத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சோபோர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்நடவடிக்கையின் போது ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மற்ற விவகாரங்களுடன் இணைத்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் காரணமாகவே அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை மற்ற பிரச்சினைகளுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல என்றும், இதனால் வதந்திகள் பரவு வதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
"மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்," என்றும் ஆளுநர் சத்யபால் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

