அகமதாபாத்: கடந்த சில தினங்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் வதோதராவில் குடியிருப்புப் பகுதிக்குள் முதலைகள் புகுந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
கடந்த 2ஆம் தேதி அன்று 24 மணிநேரமும் இடைவிடாமல் பெய்த மழையால் வதோதரா வெள்ளக் காடானது. அங்கு ஐம்பது சென்டி மீட்டர் மழை பதிவானதாகவும், மழை தொடர்பான சம்பவங்களில் ஐந்து பேர் பலியானதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சில குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த முதலைகள் நாய்களை வேட்டையாடிய காட்சி காணொளிப் பதிவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து முதலைகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இதன் பலனாக சில முதலைகள் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழையால் விஸ்வாமித்ரி ஆறு நிரம்பி வழிந்ததால் ஆற்றில் இருந்த முதலைகள் நகருக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆற்றில் 150 முதலைகள் இருந்திருக்கலாம் என்றும், அவற்றில் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கரையோரப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
"இந்த முதலைகள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால் இதுவரை மீட்கப்பட்ட முதலைகள் 5 அடி மட்டுமே உள்ளன. முதலைகளைப் பிடிக்க 6 குழுக்கள் அமைத்துள்ளோம். முதலைகள் தவிர 2 ஆமைகள், சில பாம்புகளையும் மீட்டுள்ளோம்.
"எனவே பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை," என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

