அமராவதி: மாணவர்களைப் போலவே தினமும் பள்ளிக்கூடம் வந்து செல்லும் குரங்கு ஆந்திர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அங்குள்ள கர்னூல் மாவட்டம், வெங்கலம்பல்லி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு நிறைய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 12 தினங்களாக ஒரு குரங்கு பள்ளிக்கு வந்து செல்கிறது. அது மட்டுமல்ல, தினமும் மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தையும் கவனிக்கிறது.
குரங்கைக் கண்டு முதலில் பயந்துபோன மாணவர்கள், பின்னர் அதன் அமைதியான போக்கால் பயம் நீங்கி அதனுடன் பழகத் தொடங்கிவிட்டனர். மேலும் அந்தப் பெண் குரங்குக்கு 'லட்சுமி' என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
குரங்கு நாள் தவறாமல் பள்ளிக்கு வந்து செல்வதாகவும், மாணவர்களிடம் நட்பு பாராட்டுவதாகவும் பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் லத்தீப் கூறுகிறார்.
"கடந்த வியாழக்கிழமை லட்சுமிக்கு உடல்நலம் குன்றியது. தகவல் அறிந்த மாணவர்கள் துடித்துப் போயினர். உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பல வகையான தின்பண்டங்களை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி மாணவர்களை சமாதானப்படுத்தி உள்ளார் கால்நடை மருத்துவர்.
"அவர் அளித்த சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வெள்ளிக்கிழமை லட்சுமி வழக்கம் போல் பள்ளிக்கு வந்ததும் தான் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர். அந்தளவுக்கு லட்சுமியுடன் மாணவர்கள் நெருக்கமாகி விட்டனர். லட்சுமியை தினமும் பார்ப்பதற்காகவே பலர் பள்ளிக்கு தவறாமல் வருகின்றனர்," என்கிறார் அப்துல் லத்தீப்.
லட்சுமிக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தினமும் பழங்கள் வாங்கி வருவது வழக்கமாகி உள்ளது.
லட்சுமியின் வருகையால் அப்பள்ளியில் அன்றாட மாணவர் வருகை நூறு விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

