ஹைதராபாத்: இந்திய ராணுவம் பிற நாடுகளைத் தாக்கும் பொருட்டு வளர்க்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தாக்குதல் நடவடிக்கைக்காக இந்தியா ஏவுகணைகளைத் தயாரிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்ட அவர், ராணுவத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளையும் உள்நாட்டு தயாரிப்பு மூலமாகவே பூர்த்தி செய்ய அரசு விரும்புவதாக தெரிவித்தார்.
"இந்தியாவில் தயாரிக்கப்படாத, முக்கியமான ஆயுதங்களை தேவை ஏற்பட்டால் மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம்.
"நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு, உதிரி பாகங்கள் உற்பத்தியில் அந்நிய முதலீடு ஆகியவற்றின் மூலமாக அரசு நிர்ணயித்த இலக்கை எட்டுவதில் பாதுகாப்புத் துறை முக்கியப் பங்கு வகிக்கும்," என்றார் ராஜ்நாத் சிங்.
தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது மட்டும் அல்ல என்றும், அது ஒவ்வொருவருக்கும் எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பல ஆண்டுகளாக தீவிரவாதத்தை வளர்த்தவர்களும், அதற்கு மறைமுகமாக உதவி செய்தவர்களும் இப்போது, அமைதி மற்றும் ஜனநாயக அமைப்பில் இணைவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
"தீவிரவாதம் சகிப்புத் தன்மையற்ற செயல் என்பதை ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா புரிய வைத்துள்ளது," என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.

