புதுடெல்லி: ஒரு நல்ல மகன் அம்மா, மனைவி உறவை சரியாகக் கையாள்வது போலவே ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது அலுவல்களைப் பார்த்துக் கொண்டே தொகுதி மக்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்களுக்கான பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிதாகத் தேர்வாகும் எம்பிக்களுக்கும் அவரது தொகுதி மக்களுக்கும் இடையேயான உறவு என்பது மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான உறவைப் போன்றது என்றார்.
"மருமகள் வந்தவுடன் மாமியார் தனது மகனின் கவனம் முழுவதுமே மனைவி பக்கம் சென்று விட்டதாகக் கருதுவார்.
"அதுபோலத்தான் தொகுதியில் உங்கள் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட நலன் விரும்பிகளும் மக்களும்கூட எம்.பி. இனிமேல் நம் தொலைபேசி அழைப்பை ஏற்பாரா? தொகுதிக்கு வருவாரா? என நினைப்பார்கள்," என்றார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத்திலும் தொகுதியிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பாஜக எம்பிக்களுக்கு அக்கட்சித் தலைமை இரண்டு நாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு எம்பிக்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இதற்கிடையே உலக நட்பு தினத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடை யேயான நட்பு மேலும் வலுப்பெற விரும்புவதாக அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

