ஜம்மு காஷ்மீர் தொடர்பான பாஜக அரசு முடிவுக்குப் பல கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

ஜம்மு காஷ்மீர் தொடர்பான பாஜக அரசு முடிவுக்குப் பல கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

2 mins read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் முழுவிழிப்புநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டின் அனைத்து மத்திய ஆயுதப் போலிஸ் படைகளுக்கும் மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் உள்துறை அமைச்சு அவசர உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தங்களுடைய நிலைகளைப் பாதுகாக்கும்படியும் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் படியும் அமைச்சு அறிவுறுத்தி உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்ற மேலவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்யும் மசோதாவை, பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகள் கூட திட்டவட்டமாக ஆதரித்தது வியப்பாக இருந்தது.

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதாதளம், தமிழ்நாட்டின் அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை அந்த மசோதாவை ஆதரித்த கட்சிகளில் உள்ளடங்கும்.

இருந்தாலும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் நேற்று மேலவையில் அந்த மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தது.

அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் பற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தில் விடுத்தபோது மக்கள் ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் நகலை கிழித்து எரிந்தனர்.

அதனை அடுத்து உறுப்பினர்கள் இரண்டு பேர் மன்றத்தைவிட்டு விலக்கிவைக்கப்பட்டனர்.

காங்கிரஸ், திமுக, மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் உள்துறை அமைச்சரின் அறிவிப்பை எதிர்த்தன.

ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட பல அமைப்புகளும் பாஜகவின் நடவடிக்கையை ஆதரித்தன. இந்தியாவின் தலையைத் துண்டித்துவிட்டார்கள் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஜம்மு காஷ்மீர் தலைவர்களும் கடும் ஆட்சேபம் வெளியிட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என்றும் ஜனநாயகப் படுகொலை நடந்து இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

மேலவையில் மதிமுக உறுப்பினர் வைகோ, திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் மத்திய அரசின் முடிவை எதிர்த்தனர்.

இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், "ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் கருத்துகளை அறியாமல் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலைக்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது,"என்று கருத்து கூறினார்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அத்வானி, வரலாற்றுச் சிறப்புக்குரிய துணிச்சலான முடிவை எடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியைத் தான் பாராட்டுவதாக தெரிவித்தார்.

அதேவேளையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், முன்பின் யோசியாமல் அரசு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கடுமையாகக் குறைகூறினார்.