ஜம்மு, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் கடுமையான சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
முன்னதாக 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.60 ஆகக் குறைந்தது. இன்று அது 70.71 ஆகக் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 100 இந்திய ரூபாய், சிங்கப்பூர் வெள்ளி S$1.9772க்கு இணையாக இருக்கிறது என டிபிஎஸ் வங்கி இணையத்தளம் காட்டுகிறது.
இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தமது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார்.
இந்த மாற்றத்தின் மூலமாக இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்விவகாரத்தில் அமெரிக்கா உட்பட பிற நாடுகளும் ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

