ஸ்ரீந-கர்: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எவ்வாறு ரகசியமாகவும் திட்டமிட்டும் மேற்கொண்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 2 ஆயிரம் செயற்கைக்கோள் தொலைபேசிகள், டிரோன்ஸ் கருவிகள், 35 ஆயிரம் ராணுவ வீரர்களின் உதவியோடு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு சாதித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பே சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதையடுத்து கடந்த ஜூன் 26ஆம் தேதி காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலையும் அங்கு அனுப்பி வைத்தார். மேலும் பல உயர் அதிகாரிகளும் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர்.
இதையடுத்தே 35 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். தகவல் பரிமாற்றத்துக்காக இரண்டாயிரம் செயற்கைக்கோள் தொலைபேசிகளும், டிரோன்ஸ் எனப்படும் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.
காஷ்மீரில் இருந்த வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இரண்டே நாளில் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் தொடர்பு, இணைய தள சேவை, தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிரடியாக சிறை பிடிக்கப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். இவை அனைத்தையும் மத்திய அரசின் ரகசிய குழுக்கள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக செய்து முடித்தன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், பஞ்சாபில் எதிர்ப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகமும் கூட வருங்காலத்தில் பிரிக்கப்படலாம் என ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், தம்மை முதுகில் குத்தாமல் நெஞ்சில் குத்துமாறு ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் அனுபவித்த சலுகைகள்
ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்புத் துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்குப் பொருந்தாது.
காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துகள் வாங்கலாம்.
காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பன உள்ளிட்ட பல சலுகைகளை காஷ்மீர் மக்கள் 370ஆவது சட்டப்பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.

