புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செங்கார் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் உத்தரப்பிரதேச சிறையிலிருந்து டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது.
17 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து குல்தீப் சிங் கைதானார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு அவர் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து உத்தரப்பிர தேச மாநிலம், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய ரிசர்வ் படை போலிசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அப்பெண்ணின் குடும்பம் கோரியுள்ளது.

