சிங்கப்பூரில் தரையிறங்கியது விஸ்தாரா

சிங்கப்பூரில் தரையிறங்கியது விஸ்தாரா

1 mins read
87dbb670-46a7-4223-94df-180a5395abcf
-

விஸ்தாரா விமான நிறுவனம் தனது விமான எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கு கூடுதலாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையின் விரிவால் விஸ்தாரா இவ்வாண்டு தனது வளர்ச்சியை முடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

'டாட்டா சன்ஸ்' நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்ட விஸ்தாரா, சிங்கப்பூரை அடையும் தனது முதல் அனைத்துலக விமானப் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. இதனைக் கொண்டாடும் வகையில் விஸ்தாரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டது.

தற்போதைய விமான எண்ணிக்கை 30. இதனை 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 41க்கு உயர்த்தத் திட்டமிடுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தெங் தெரிவித்துள்ளார்.

நொடித்துப்போன தனது போட்டி நிறுவனமான 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தன்வசம் ஈர்க்க விஸ்தாரா முயல்கிறது. 100 விமானிகள் உட்பட, 600 முன்னாள் 'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்களை விஸ்தாரா வேலையில் அமர்த்தியுள்ளதாகத் திரு தெங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பேங்காங் மற்றும் துபாய்க்குச் செல்லும் பயணச் சேவைகளை வழங்குவதாக விஸ்தாரா முன்னர் அறிவித்திருந்தது.