இந்தியா தனது 5ஜி கட்டமைப்புக்கு ஹுவாவெய் நிறுவனத்தைப் பயன்படுத்த சீனா நெருக்கி வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவால் இந்தியா நெருக்குதலுக்கு ஆளாகக் கூடாது என்று சீனா கூறியுள்ள நிலையில் அவரது கருத்து வெளிவந்துள்ளது.
தொலைத்தொடர்புக் கருவிகளுக்கான பெருநிறுவனமான ஹுவாவெய், அனைத்துலக 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. பாதுகாப்புக் காரணங்களால் அமெரிக்கா அந்நிறுவனத்தின் இறக்குமதிகளைத் தடை செய்துள்ளது. அத்துடன் ஹுவாவெய் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறது.
"இந்தியா தனது 5ஜி கட்டமைப்பை அமைப்பதற்காக ஹுவாவெய்யைப் பயன்படுத்துமாறு சீனா அந்நாட்டுக்கு நெருக்குதல் கொடுக்கிறது. சீனா எல்லை தெரியாமல் நடந்துகொள்கிறது" என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் பேங்ஸ் சாடியுள்ளார்.
ஓட்டுநரில்லா வாகனங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை ஆதரிக்கவல்ல 5ஜி தொழில்நுட்பத்தை உலக நாடுகள் கவனத்துடன் ஆராய்கின்றன.
ஹுவாவெய் குறித்து இந்தியா பாரபட்சமின்றி சுயேச்சையாக முடிவெடுக்கவேண்டும் என விரும்புவதாக சீனா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவே தனது சொந்த 5ஜி கட்டமைப்பை உருவாக்கக்கூடும் என்று அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அண்மை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

