இந்தியாவுடனான தனது உறவின் முக்கியத்துவத்தைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு செய்ததை அடுத்து பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு இந்தியா கேட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவு தனது உள்நாட்டுப் பிரச்சினையுடன் தொடர்புடையது என்று கூறிய இந்தியா, காஷ்மீருக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனத் தெரிவித்துள்ளது.
காஷ்மீரைத் தனக்கென சொந்தமான சட்டங்களை வகுக்கும் உரிமையை இந்திய அரசாங்கம் இவ்வார தொடக்கத்தில் ரத்து செய்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்குவதற்கான தடையும் அகற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர் மீது உரிமை கொண்டாடும் மற்றொரு நாடான பாகிஸ்தான், இந்த முடிவு குறித்த அதிருப்தியில் தனது நாட்டுக்கான இந்திய தூதரை வெளியேற்றியதுடன் புதுடெல்லியிலுள்ள தனது தூதரையும் மீட்டுக்கொண்டது.
மேலும் பாகிஸ்தான் இந்தியாவுடனான இருநாட்டு வர்த்தகத்தைத் தடை செய்துள்ளது. அத்துடன், இந்தியாவைத் தன்னுடன் இணைக்கும் ரயில் சேவையையும் தடை செய்வதாக அந்நாடு அறிவித்தது.
பாகிஸ்தானின் செயல் குறித்து வருந்துவதாகவும் அந்நாடு தனது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவும் கேட்டுக்கொள்வதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு இன்று கூறியது.

