மோடி: காஷ்மீருக்கு இனி நல்ல காலம்

மோடி: காஷ்மீருக்கு இனி நல்ல காலம்

2 mins read
6e94c04b-da14-4f05-9880-bc13f1bdce05
-

புதுடெல்லி: காஷ்மீரின் பிரத்தியேக சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் வியாழன் இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரின் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியளித்த 370ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. சிறப்புத் தகுதியால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும்தான் அதிகரித்தன. சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு," என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சில நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்புத் தகுதியை ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு அறிவித்தது.

இந்த முடிவால் இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் அனைத்துலக நாடுகளின் பார்வையும் ஜம்மு-காஷ்மீர் பக்கம் திரும்பியுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் வியாழக்கிழமை இரவு உரையாற்றினார்.

"ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் புதிய சகாப்தம் தொடங்க இருக்கிறது. சிறப்புத் தகுதியால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம், ஊழல், பயங்கரவாதம், குடும்ப ஆட்சி ஆகியவை மட்டுமே அதிகரித்து வந்துள்ளன. வேறு எந்த வகையிலும் மாநிலத்துக்குப் பலன் ஏற்படவில்லை. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் கருவியாக அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதியை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 42,000 பேர் பயங்கரவாதச் சம்பவங்களால் உயிரிழந்து விட்டனர். மத்திய அரசு இப்போது எடுத்துள்ள நடவடிக்கை மூலம் அந்த மாநிலத்தை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம்.

"இனி அரசு சலுகைகள் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும். அங்குள்ள அரசுப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். அங்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வளர்ச்சியடையும்.

"லடாக் பகுதி தொடர்ந்து யூனியன் பிரதேசமாக இருந்தாலும் ஜம்மு-காஷ்மீர் நீண்ட காலத்துக்கு யூனியன் பிரதேசமாக இருக்காது. இப்போதைய நிலைமை தற்காலிக மானதுதான். அங்கு நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.