இந்தியாவின் தென்மாநிலமான கேரளாவின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து கேரளா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக வியாழக்கிழமை முதல் நேற்று வரை 27 பேர் மாண்டுவிட்டதாக கேரள அதிகாரிகள் கூறினர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் ஆற்றின் அருகே அமைந்துள்ள கொச்சி அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் விமானப்படையினரின் உதவியைக் கோரியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். மற்ற மாவட்டங்களைவிட வயநாடுதான் அதிக சேதத்தைச் சந்தித்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள புதுமலை கிராமம் வெள்ளத்தில் அழிந்துவிட்டது.
சுமார் 100 ஏக்கர் தேயிலைத் தோட்டம், கோயில், பள்ளிவாசல், அஞ்சலகம் போன்றவை வெள்ள நீரி மூழ்கின. புதுமலை கிராமம் என்று இனி எதுவும் கிடையாது என்று நிலச்சரிவில் உயிர்தப்பி ஒரு கிராமவாசி கூறினார். அந்தப் குதியில் புதையுண்ட நிலையில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 20 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரளா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் வெள்ளத்தில் சிக்கியது. 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

