இந்தியாவின் தெற்கு மற்றும் வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கின்றன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கேரளாவில் மட்டும் நேற்று நிலவரப்படி 51 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் கடற்படையும் இணைந்து மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
கேரளா
கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக மழை வெளுத்து வாங்குவதால் அங்குள்ள 44 ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால், கேரளாவில் எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கடைகள், கட்டடங்கள் என அனைத்தும் பாதி நீரில் மூழ்கி காணப்படுகின்றன. வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கனமழை, நிலச்சரிவு காரணமாக சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாளை நண்பகல் வாக்கில் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட வயநாடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, கேரள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கேரள மக்களுக்கு எல்லாவித உதவிகளும் வழங்கப்படும் என்று திரு மோடி உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட திரு ராகுல் இன்று வயநாடு செல்கிறார்.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் கனமழையால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெல்காம், ஹூப்ளி, சிமோகா, மங்களூரு, மடிகேரி ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கர்நாடகாவில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சாங்லி, கோலாப்பூர் மாவட்டங்கள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோலாப்பூர் வழியாக செல்லும் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது.
ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்பதால், படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சுமார் மூன்று லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
குஜராத்
குஜராத் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கோத்ரா, கேடா மாவட்டம் நடியாட் ஆகிய நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோத்ரா ரயில் நிலைய தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

