காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தைப் புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தைப் புறக்கணித்த சோனியா, ராகுல் காந்தி

1 mins read

புதுடெல்லி: அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்திலிருந்து சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் வெளியேறியுள்ளனர். பிரியங்கா காந்தி மட்டும் நேற்று கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திலிருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, தாங்கள் பங்கேற்பது சரியாக இருக்காது என்றும் அது தலைவர் தேர்வில் விளைவை ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார்.

இந்நிலையில், பிரியங்காவை அடுத்த தலைவராக தேர்வுசெய்ய வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுகின்றன. இதற்கான முயற்சியில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இறங்கினார். இருந்தபோதிலும், தனது தாயார் மற்றும் சகோதரியை தலைவர் பொறுப்புக்கு கொண்டு வரக்கூடாது என்பதில் திரு ராகுல் விடாப்பிடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்ததிலிருந்து, அதன் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டன.

இதன்பின்னர், பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்த ராகுல், அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அடுத்த தலைவராக மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. புதிய காங்கிரஸ் தலைவர் விரைவில் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.