ஜம்மு: ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் தடை உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 இம்மாதம் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் இயல்புநிலை திரும்பி வருகிறது.
இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவி வந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகை, மருந்து, காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டன. ஜம்மு சந்தையில் பொருட்களை வாங்க நேற்று மக்கள் பெருமளவு குவிந்தனர். ஜம்முவில் பள்ளிகள், கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பெருமளவில் பள்ளிகளுக்குத் திரும்பினர். சாலைப் போக்குவரத்தும் சீர்செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.
ஸ்ரீநகரில் பல இடங்களில் 144 தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுத்தனர். இதனால் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதனிடையே, அனந்தநாக்கில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் கால்நடை வணிகர்கள், உள்ளூர் மக்களைச் சந்தித்து அவர் உற்சாகத்துடன் உரையாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

