'இனி காஷ்மீரிலிருந்து மணப்பெண் எடுக்கலாம்'

'இனி காஷ்மீரிலிருந்து மணப்பெண் எடுக்கலாம்'

2 mins read

ஹரியானா மாநிலத்துக்கு இனி காஷ்மீரிலிருந்து மணப்பெண் கொண்டுவரலாம் எனப் பேசியதால் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், காஷ்மீர் பெண்கள் இனி வெளி

மாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்ற நிலை மாறுகிறது.

இதனை சுட்டிக்காட்டிய திரு கட்டார், "ஹரியானாவில் ஆண் -பெண் விகிதம் குறைந்தபோது அமைச்சர் தனகர் ஒரு யோசனை சொன்னார். நாம் ஏன் பிகாரிலிருந்து மருமகள்களைக் கொண்டுவரக்கூடாது என்றார்.

"ஆனால், இப்போது காஷ்மீரில் பெண் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. நகைச்சுவைக்கு அப்பால் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு சமூகத்தில் ஆண்-பெண் விகிதம் சீராக இருந்தால்தான் அந்தச் சமூகம் நேர்த்தியாக இருக்கும்," என்று கருத்துரைத்தார்.

ஹரியானாவில் பாலின விகிதம் மிகவும் மோசமாக இருந்ததாகச் சொன்ன அவர், 1000 ஆண் பிள்ளைகளுக்கு 850 பெண் பிள்ளைகள் என்ற நிலையிலேயே அது இருந்ததைச் சுட்டினார்.

"ஹரியானாவில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. பெண் பிள்ளைகளைக் காப்போம் என்ற பிரசாரத்தைத் தொடங்கினோம். இப்போது 1000 ஆண் பிள்ளைகளுக்கு 933 பெண் பிள்ளைகள் என்ற விகிதத்தை அடைந்துள்ளோம்," என்றார் அவர்.

திரு கட்டார் என்னதான் நகைச்சுவைக்காக கூறியிருந்தாலும், சிறப்பு அந்தஸ்து ரத்தால் இனி காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்ய முடியும் என்பதுதான் பெரிய பலன் என்பதுபோன்ற அவரின் பார்வை பலரது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து ஏற்கெனவே முசாபர் நகரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், "இனி காஷ்மீரின் வெள்ளைநிற பெண்களைத் திருமணம் செய்யலாம்," எனக் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.