யமுனா நகர்: இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்த பணக்கார நிலக்கிழார் ஒருவரிடம் அவரது மகன் 'ஜாகுவார்' கார் கேட்டுள்ளார். ஆனால், தந்தையோ அதை வாங்கித்தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளையர் தனது புதிய 'பிஎம்டபுள்யூ' சொகுசு காரை நேற்று முன்தினம் அங்குள்ள ஆற்றில் இறக்கிவிட்டார்.
ஆற்றில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சியையும் காணொளியாக தனது கைபேசியில் அவர் படம்பிடித்தார். ஆனால், ஆற்றின் நடுவே கார் சிக்கிக்கொண்டு நின்றது. இதனை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு குவியத்தொடங்கினர். ஆனால், அந்த இளையர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மற்றவர்களுடன் சேர்ந்து காரை மீட்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த காரின் விலைமதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலிசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

