புதுடெல்லி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாட்டு மக்கள் புகட்டிய பாடத்திலிருந்து காங்கிரஸ் கட்சி எதையும் கற்பதற்கு விருப்பமின்றி உள்ளதாக மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த தேர்தலின்போதே நாட்டு மக்கள் வாரிசு அரசியலை நிராகரித்து விட்டதாகக் குறிப்பிட்டார். "காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இன்னும் கூட ராகுல்தான் தலைவராக வேண்டும் அல்லது சோனியா காந்திதான் தலைவியாக வேண்டும் என்று கூறுவது வியப்பளிக்கிறது. கட்சியை வழிநடத்த இவர்கள் இருவரும்தான் சரியானவர்கள் என்று காங்கிரசார் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். "ஆனால் பாஜகவைப் பாருங்கள். உதாரணக் கட்சியாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் இயற்கையாக வளர்வார்கள், கட்சியும் வளர்த்துவிடும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பியுள்ளது," என்றார் சிவராஜ்சிங் சௌகான்.
முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமுள்ள அக்கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதிய தலைவரைத் தேர்வு செய்யவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வேண்டுமென பெரும்பானாலோர் வலியுறுத்தினர். எனினும் ராகுல் தலைவராகத் தொடர தமக்கு விருப்பமில்லை என மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் தனது தாயார் சோனியாகாந்தியுடன் வெளியேறினார்.
இதன் பின்னர் கட்சியின் இடைக்காலத் தலைவியாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான அறிவிப்பு உடனடியாக வெளியானது. இதையடுத்தே பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சௌகான் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். "அதேபோல மேற்கு வங்கத்தில் மக்களை திருப்திபடுத்தும் அரசியலையும் மக்கள் நிரா கரித்து வருகிறார்கள், தேசியவாதத்தையும், வளர்ச்சியையும்தான் விரும்பு கிறார்கள்.
"காங்கிரஸ் கட்சி தங்களின் தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும். அதில் தோல்வி அடைந்தால், யாரும் அந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியாது," என்றும் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

