ஒரே கல்லூரியில் மகளுடன் சட்டம் பயிலும் தந்தை

ஒரே கல்லூரியில் மகளுடன் சட்டம் பயிலும் தந்தை

2 mins read
cfb0b20d-d191-46ee-adbf-48172d6e37a2
-

மும்பை: தந்தையும் மகளும் ஒரே சட்டக் கல்லூரியில் படிப்பதாக வெளியான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மும்பையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் குறிப்பிடாமல் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தம்மைப்போலவே தனது தந்தைக்கும் சட்டத் துறை மீது மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வறுமையின் காரணமாகவே தமது தந்தையால் சட்டம் படிக்க முடியவில்லை என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ள மாணவி, தனது தந்தை தற்போது ஒரு நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

"தன்னைப் போலவே பிள்ளைகளும் கனவுகளைத் தொலைத்துவிடக் கூடாது என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். இரவு பகல் பாராமல் அவர் உழைத்ததால் எனக்கு உயர்கல்வி கிடைத்தது.

"என் சகோதரி மருத்துவராகப் பணியாற்றுகிறார். மூத்த சகோதரர் என்னுடன் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்," என்று தமது பதிவில் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் தனது தந்தை தினமும் கல்லூரியில் நடக்கும் பாடங்கள், வகுப்பு முறை குறித்தெல்லாம் ஆர்வமாக விவரம் கேட்பார் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, ஒரு கட்டத்தில் தாம் படிக்கும் சட்டக் கல்லூரியிலேயே தனது தந்தையும் மாணவராகச் சேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

"கல்லூரியில் அவரை விட நான்தான் சீனியர். படிக்க வேண்டும் என்ற என் தந்தையின் ஆர்வத்தைப் பார்க்கும்போது மற்றவர்களைப்போலவே எனக்கும் வியப்பாக உள்ளது.

"கல்லூரி தொடர்பாக இருவரும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

"தினமும் வகுப்பு இடைவேளையின்போது என் தோழிகளுடன் தந்தையும் இணைந்துகொள்வார்.

"தோழிகளுக்கும் என் தந்தையை ரொம்பப் பிடிக்கும்," என்று அம்மாணவி மேலும் தெரிவித்துள்ளார்.