அமைச்சர் ரமேஷ் போக்ரியால்: சமஸ்கிருத மொழியால்தான் பேசும் கணினி சாத்தியமாகும்

அமைச்சர் ரமேஷ் போக்ரியால்: சமஸ்கிருத மொழியால்தான் பேசும் கணினி சாத்தியமாகும்

1 mins read

மும்பை: வருங்காலத்தில் பேசும் கணினிகள் உருவாவது சாத்தியம் எனில் அது சம;ஸகிருத மொழியின் பங்களிப்பாகவே இருக்கும் என மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தக் கூற்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சமஸ்கிருதம் என்பது ஓர் அறிவியல் மொழி என்று குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் சமசுகிருத மொழி சமுதாயத்துக்குப் பல்வேறு நல்ல பங்களிப்புகளைத் தரும் என்றார்.

"பேசும் கணினிகள் சமஸ்கிருத மொழியால் மட்டுமே சாத்தியமாகும் என்பதற்கு நாசா சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி உள்ளது.

"சமஸ்கிருதத்தில் மட்டும்தான் ஒருவர் எத்தகைய வகையில் பேசுகிறாரோ அவ்வாறே அந்த வார்த்தைகளை எழுதவும் முடியும்.

"எனவேதான் சமஸ்கிருதத்தை

அறிவியல் மொழி என நாசா அமைப்பு கூறுகிறது.

"உலகளவில் சமஸ்கிருதம் தவிர வேறொரு அறிவியல் மொழி இல்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்," என்றார் ரமேஷ் போக்ரியால்.

ஏற்கெனவே மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இது தொடர்பான போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அதிக நிதியும், தமிழ் மொழி சார்ந்த பணிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமஸ்கிருதம் மட்டுமே உலகிலுள்ள ஒரே அறிவியல் மொழி என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.