பெய்ஜிங்: இருதரப்பு வேற்றுமைகள் மோதல்களாக மாறிவிடக்கூடாது என்று தனது சீனப் பயணத்தின் போது வலியுறுத்தியுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அரசு முறை பயணமாக மூன்று நாட்களுக்கு சீனா சென்றுள்ள ஜெய்சங்கர் இந்தியா - சீனா உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பெய்ஜிங் சென்று, காஷ்மீர் பிரச்சினையில் சீன ஆதரவைக் கோரியிருந்தார். இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் சீனப் பயணத்தின் ஒரு பகுதியாக சீன துணை அதிபர் வாங் கிஷானையும் வெளியுறவு அமைச்சர் வாங் யீயையும் சந்தித்தார் ஜெய்சங்கர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "உலக அரசியலில் இந்திய-சீன உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருநாட்டு தலைவர்களும் ஒன்று கூடி ஒருமித்த கருத்தை எட்டினர்.
"அதை உறுதிப்படுத்த, இருநாடுகளுக்கும் இடையில் ஏதேனும் வேற்றுமைகள் இருப்பின் அவை மோதல்களாக மாறவிடக்கூடாது என்பது முக்கியம். கடந்த ஆண்டு நடந்த வுஹான் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு, இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் கண்டோம்," என்றார்.
முன்னதாக, சட்டப்பிரிவு '370' ரத்து செய்யப்பட்டதற்கு சீன அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இந்தியா அறிக்கை வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கும் இடையே இவ்வாண்டு இறுதியில் நடை பெறவுள்ளதாகக் கூறப்படும் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.

