மழை வேண்டாம் என்றும் வேண்டும் என்றும் வழிபாடு

மழை வேண்டாம் என்றும் வேண்டும் என்றும் வழிபாடு

2 mins read
69d2d012-fef6-4e60-b95b-dd41a9fa0fc3
-

பெங்களூரு: கர்நாடகாவில் மழை வேண்டாம் என்று வருணபகவானுக்கும் மழை கொட்டி தீர்க்க வேண்டி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வட கர்நாடகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த அடைமழையாலும் மகாராஷ்டிர மாநில கொய்னா அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீராலும் வட கர்நாடகத்தில் சுமார் 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தற்போது மழை குறைந்தபோதிலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் தண்ணீரில் செத்து மிதக்கின்றன. அத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரின் உடல்களும் மிதந்து வந்த வண்ணம் உள்ளன. இதனால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதற்கிடையில், வடகர்நாடகம், மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வேண்டாம் என்று வருண பகவானுக்கு பெங்களூரு நெலமங்களாவில் உள்ள உசசங்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதே வேளையில், தென் கர்நாடகத்தில் அமைந்துள்ள துமகூரு, ராமநகர், சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

எனவே துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே தாலுக்கா மாரநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மழை பெய்ய வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.

இதற்கிடையே, கர்நாடகாவின் கிருஷ்ணா படுகையில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கையானது அல்ல, மனிதனால் உண்டாக்கப்பட்ட பிரச்சினை என்கிறார்கள் வல்லுநர்கள். கிருஷ்ணா படுகையில் ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேலாண்மை திட்டம் இல்லாததே வெள்ளச் சேதங்களுக்கு மூல காரணம் என்றும் இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள்தான் காரணம் என்றும் நீர் நிபுணரும் நீர்வளத் துறையின் ஓய்வுபெற்ற செயலாளருமான ராஜா ராம் கூறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.