திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒரு வயது மகனை இறுகப்பற்றிக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலப்புரம் அருகே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அளிக்கும் காட்சி ஒன்றைக் கண்டுள்ளனர். மலப்புரத்தின் சாத்தக்குளம் பகுதியில் வசித்தவர் 21 வயது கீது.
நிலச்சரிவில் சிக்கிய கீது, தனது மகனை இறுகப்பற்றிக்கொண்டு அணைத்தபடி உயிரிழந்தார். இதனைக் கண்ட மீட்புப் படையினர், அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அதே இடத்தில் இருந்த கீதுவின் கணவர் சரத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

