ரஜினியை சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்‌ஷா

ரஜினியை சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்‌ஷா

2 mins read
38f28488-6df4-4002-9fc9-148f578f9d10
சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். படம்: தமிழக ஊடகம் -

பாஜக, ரஜினி இணைந்து செயல்படுவது தொடர்பானதாகவே தமிழக அரசியல் விமர்சனங்கள் தொடருகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக்கொண்ட செயல் ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய மறுநாளே மத்திய அரசின் நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

இப்படி தனக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வரும் ரஜினியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்புகிறது.

ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார்.

அடுத்த ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியைத் தொடர விருப்பம் தெரிவித்த அமித் ஷா, அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 33 விழுக்காடு தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக தலைமை யை கேட்டுக்கொண்டார். அமித் ஷா விரும்பினாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு இந்தளவுக்கு அதிகமான இடங்களை ஒதுக்குவது என்பது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பரிசீலிப்பதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த விவரத்தை அறிந்த அமித் ஷா அது தொடர்பாக தமது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக, வேலூர் தேர்தலில் போராடி வென்றதற்கான காரணங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

மேலும் வேலூர் தொகுதியில் 4.77 லட்சம் வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்குக் கிடைத்திருப்பது மக்களின் மனமாற்றத்தை உணர்த்துகிறதா என்றும் முத்தலாக், காஷ்மீர் நடவடிக்கை ஆகியவற்றின் பிரதிபலிப்பு வாக்களிப்பில் காணப்பட்டதா என்றும் அமித் ஷா கேட்டிருக்கிறார். மேலும் வேலூரின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் பற்றியும் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு கிடைத்துள்ளன என்பது பற்றியும் விரிவாக ஆய்வு நடத்தும்படி பாஜகவினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.