பெருநாள் வியாபார ஆடைகளை துயருறும் மக்களுக்கு வழங்கினார்

பெருநாள் வியாபார ஆடைகளை துயருறும் மக்களுக்கு வழங்கினார்

1 mins read
446b043c-9ed8-4e59-b6f2-e4006db23e81
எர்ணாகுளம் மாத்தன்சேரியில் கடை வைத்திருக்கும் நவ்ஷத்,  தனது கடையின் புதிய உடைகளை அள்ளிக்கொண்டு மக்களை நோக்கிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது. படம்:ஊடகம் -

திருவனந்தபுரம்: ஹஜ்ஜுப் பெருநாள் வியாபாரத்துக்காக கடை நிறைய அடுக்கி வைத்திருந்த புதிய துணிகளை எல்லாம் வெள்ளத்தால் அவதியுற்ற மக்களுக்கு வழங்கி மகிழ்ந்துள்ளார் வியாபாரி ஒருவர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக மக்கள் தங்கள் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளதால் பக்ரீத் பண்டியை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு வியாபாரத்துக்காக உடைகளை வாங்கி வந்திருந்த வியாபாரி நவ்ஷத் என்பவர், தான் வாங்கிய அனைத்து ஆடைகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாத்தன்சேரியில் கடை வைத்திருக்கும் நவ்ஷத், தனது கடையின் புதிய உடைகளை அள்ளிக்கொண்டு மக்களை நோக்கிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நவ்ஷத் கூறும்போது, "கேரளாவில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இதை நான் செய்தேன். இப்போதும் செய்கிறேன்.

இந்த ஆடைகள் அனைத்தும் கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்டவை. அவற்றை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.