உச்ச நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க முடியாது

உச்ச நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க முடியாது

1 mins read
2c8d3fbf-249d-47af-8bf6-907570b33dba
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனத்தை அனுமதிப்பதற்கு முன் ஆவணங்களைச் சரிபார்க்கும் இந்திய துணை ராணுவப் படை வீரர். படம்: இபிஏ -

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்குக் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற கூறியுள்ள உச்ச நீதிமன்றம் அங்கு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க மறுத்துவிட்டது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக்கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சூழலை ஆராயக் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு அருண் மிஷ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய குழு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "காஷ்மீரில் தற்போது மிகவும் உணர்ச்சிகரமான சூழல் நிலவுவதால், இயல்பு நிலை திரும்புவதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும்.

"எனவே தற்போது கட்டுப்பாடு களை நீக்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், 2 வாரங்கள் கழித்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினர்.

இதற்கிடையே, காஷ்மீரில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் நிலைமை சரியாக உள்ளது என்று அறிக்கையளித்தால் மட்டுமே கட்டுப்பாடுகளை அகற்றுவது சாத்தியம் எனவும் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.