கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

2 mins read

புதுடெல்லி: கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதன் இரண்டு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்தது.

காணாமல் போன 52 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் பினராயி விஜயன், வயநாடு, மலப்புரம் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழில் கோரிக்கை விடுத்துள்ள கேரள முதல்வர்

இந்நிலையில், டுவிட்டர் மூலம் தமிழக மக்களுக்குத் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

அவர் தனது பதிவில், "இந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூதானம், கவளப்பாரைப் பகுதிகளும்தான்.

"தற்போது, அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அந்தப் பகுதி மக்களைச் சந்தித்தேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு முயன்றுவருகிறது.

"நூற்றாண்டு கண்ட பெருவெள்ளம் வந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆன நிலையில், இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு 31,000 கோடி ரூபாய் தேவை.

"இந்த சூழ்நிலையில், கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

"கேரள மக்களுக்கு உங்களின் உதவிகள் மிகத் தேவை. சிறிது, பெரிது என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, கனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்குக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கேரள மாநிலம் கடந்த ஒரு ஆண்டுக்குள் மிக மோசமான மழையால் பாதிப்பைச் சந்தித்துள்ளது. எனவே, கேரள விவசாயிகள் செலுத்த வேண்டிய விவசாய கடனைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை 2019 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.