கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

2 mins read

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை வரும் 18ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளக் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவிவிலகியதையடுத்து, குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கடந்த 26ஆம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

இந்நிலையில் கர்நாடகத்தில் கனமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதால், அமைச்சரவை விரிவாக்கத்தை எடியூரப்பா ஒத்திவைத்தார்.

தற்போது கர்நாடகத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிந்து நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்க எடியூரப்பா நாளை டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்ட பின்னர், 17ஆம் தேதி எடியூரப்பா பெங்களூரு திரும்புவார் என்றும் 18ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக எம்எல்ஏக்கள் ஆர்.அசோக், ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு, பாலச்சந்திர ஜார்கிகோளி, சசிகலா ஜோலே உள்பட 16 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 17 இடங்களைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களுக்காக காலியாக வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, புதிய முதல்வர் பதவி ஏற்று 20 நாட்கள் கடந்தும், துறை அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடுமையாகக் குறை கூறி வருகின்றன.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி உக்ரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடியூரப்பா ஒருவர் மட்டுமே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

"இதனால் எந்தப் பயனும் இல்லை. அமைச்சர்கள் இல்லாமல் இத்தகைய பேரிடரைச் சமாளிக்க முடியாது.

"ஒரு முதலமைச்சரை மட்டும் அரசாங்கம் என்று அழைக்க முடியாது. கர்நாடகத்தில் மாநில அரசே இல்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.

"எனவே ஆளுநர் தாமாக முன்வந்து, இந்த அரசைக் கலைக்க வேண்டும்," என்றார்.