புதுடெல்லி: தானேவில் 5 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. ஆனால், அந்தக் கட்டடத்தில் வசித்த வந்த 100 பேர், ஒருநாளைக்கு முன்னரே வெளியேற்றப்பட்டதால் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் மஹக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் வசித்து வந்தனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
இருப்பினும் குடியிருப்புவாசிகள் இதைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தநிலையில், திங்கட்கிழமை காலை கட்டடத்தில் உள்ள வீடுகளின் கதவுகள் திறக்க முடியாத அளவுக்குத் திடீரென இறுகியது.
இதனால் குடியிருப்புவாசிகள் மத்தியில் பீதி உண்டானது. பின்னர் இதுபற்றி மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு குழுவினர் விரைந்து வந்து கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை மீட்டனர்.
இதையடுத்து, அந்த கட்டடத்துக்கு 'சீல்' வைத்து மூடப்பட்டது.
இந்தநிலையில், அந்தக் கட்டடம் நேற்று முன்தினம் காலை திடீரென இடிந்து விழுந்தது.
சத்தம் கேட்டு பக்கத்து கட்டடத்தில் வசிப்பவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.
அவர்கள் மஹக் கட்டடம் இடிந்து தரைமட்டமாகி கிடந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் உயிர்தப்பிய அரிய நொடியை எண்ணி அதிர்ச்சியில் உறைந்தனர்.

