மோடி: உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் முதலீடு

இந்தியப் பொருளியலின் மதிப்பை இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.356 லட்சம் கோடி) உயர்த்தும் நோக்கில் உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் (S$1,947 பில்லியன்) முதலீடு செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 73வது சுதந்திர நாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டைப் பகுதியில் நடந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது  தேசிய கொடியை ஏற்றி, உரையாற்றியபோது திரு மோடி இவ்வாறு பேசினார்.

“இந்தியப் பொருளியலின் அடித்தளம் வலுவானது. நிலையான அரசாங்கமும் கணிக்கத்தக்க கொள்கைகளும் அதனுடன் ஒன்றுசேரும்போது இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்,” என்று பிரதமர் மோடி சொன்னார்.

“இந்தியப் பொருளியலை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மாற்ற நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். அது மிகவும் கடினம் எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், கடினம் எனக் கருதி செய்யாமல் விட்டுவிட்டால் எப்படி வளர்ச்சி காண்பது? பொருளியல் மதிப்பை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலராக ஆக்க எழுபது ஆண்டுகள் ஆயின. கடந்த ஓராண்டில் மட்டும் அதனை மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திவிட்டோம். இது, இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியப் பொருளியலின் மதிப்பை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது,” என்றார் அவர்.

உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்வதன்மூலம் அதைச் சாத்தியமாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக நூறு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வது எனத் தீர்மானித்துள்ளோம். சாலைகள், ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டமைப்பதில் அதிக முதலீடு செய்யப்படும்,” என்று அவர் விவரித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளியல் வளர்ச்சி 5.8 விழுக்காடாகக் குறைந்த நிலையில் திரு மோடியின் உரை தொழில்செய்வோர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

மற்ற உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் புரிய ஆர்வமாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சுற்றுலாத் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அதன்மூலம் பொருளியலை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றார் அவர்.

நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சுற்றுலா மையமாக உருமாற்றும் வகையில் புதிதாக நூறு சுற்றுலாத் தலங்கள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். 

அத்துடன், தொழில்புரிய உகந்த நாடுகளுக்கான உலக வங்கிப் பட்டியலில் இந்தியாவை முதல் ஐம்பது நாடுகளுக்குள் ஒன்றாக உயர்த்தவும் அரசு இலக்கு கொண்டுள்ளதாக அவர் சுட்டினார். இவ்வாண்டிற்கான அந்தப் பட்டியலில் இந்தியா 77ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

வேளாண் தொழிலுக்குத் தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் திரு மோடி சொன்னார்.

“எங்களது கவனமெல்லாம் விவசாயிகள் மீதுதான். அவர்களுடைய வருமானம் இரட்டிப்படைய வேண்டும். அவர்களின் விளைச்சலுக்கு உரிய விலை தரப்பட வேண்டும். நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்துலகச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்,” என்று அவர் பேசினார்.

அதே நேரத்தில், விளை நிலங்கள் மலடாகாமல் தடுக்க, விவசாயிகள் வேதி உரங்களைப் பயன்படுத்துவதை 30%-40% குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மோடி உரையில் திருக்குறள்

தமது உரையின்போது நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார் திரு மோடி. 

‘நீரின்றி அமையாது உலகு’ எனும் திருக்குறளை மேற்கோள் காட்டி நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதுபற்றி மக்கள் அனைவரும் அறிவர் என்றும் சொன்னார்.

இன்று  வரையிலும் தண்ணீர் வசதிகூட இல்லாத வீடுகள் உள்ளன எனக் குறிப்பிட்ட அவர், அதற்காகவே ‘நீராதார இயக்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

தண்ணீர்ப் பிரச்சினையைப் போக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், அதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்

07 Dec 2019

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்

மக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18  லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்

07 Dec 2019

இந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்