முதல்நாள் விருது; மறுநாள் லஞ்சம் வாங்கி பிடிபட்ட காவலர்

ஹைதராபாத்: பல்லே திருப்பதி ரெட்டி எனும் காவலருக்கு சுதந்திர தினத்தன்று ‘சிறந்த காவலர்’ என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூ.17,000 லஞ்சம் பெற்றதற்காக திருப்பதி ரெட்டியை லஞ்ச ஒழிப்புப் பிரிவு கைது செய்த தகவல் நேற்று முன்தினம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

உரிய ஆவணங்கள் வைத்திருந்தபோதும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் தம்மீது வழக்கு பதியப்படும் என்று தொடர்ந்து திருப்பதி ரெட்டி மிரட்டி வந்ததாக ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருப்பதி ரெட்டி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். விருது வாங்கிய அடுத்த நாளே குற்றச் செயலுக்காக கைது செய்யப்பட்ட விவரம் காவலர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈராண்டுகளுக்கு முன்பு ‘சிறந்த தாசில்தார்’ என்று விருது வாங்கிய  வருவாய் அதிகாரி வீட்டிலிருந்து ரூ.93.5 லட்சம் ரொக்கமும் 400 கிராம் தங்கமும் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next