உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது குறித்து வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐக்கு கூடுதலாக 2 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இவ்வேளையில்,  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  அந்தப் பெண்ணுக்கு   நேற்று நினைவு திரும்பியது.  தான் வந்த கார் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் அது திட்டமிட்ட கொலை என்றும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் வழக்குரைஞரின் மருத்துவச் செலவுக்காக உத்தரப்பிரதேச அரசு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அந்த இளம்பெண்ணை, பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கடந்த 2017-ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து  குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது. 

இந்த வழக்கு தொடர்பாக, குல்தீப் செங்கரிடம் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து குல்தீப் செங்கர், அவரின் உதவியாளர் சசி சிங் இருவர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. 

இவ்வேளையில், ஜூலை 28ம் தேதி அந்தப்பெண் சென்ற கார் மீது டிரக் மோதியதில், உடன் வந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 

உன்னாவ் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியது. அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.