நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாகப் புகுந்துள்ள ‘சந்திரயான்-2’

இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம், கிட்டத்தட்ட முப்பது நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

இது இந்தப் பயணத்தின் ஆகச் சிக்கலான நடவடிக்கை.  விண்கலத்தின் வேகம், கணிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி அதிகமாகச் சென்றிருந்தால் அந்த விண்கலம், விண்வெளியில் தொலைந்துபோயிருக்கும். இதற்கு நேர்மாறாக அந்த விண்கலம் மெதுவாகச் சென்றிருந்தால் நிலவின் ஈர்ப்புச் சக்தி அதனை நிலவின் மேற்பரப்பு மேல் மோதச் செய்து சுக்குநூறாக்கியிருக்கும்.

‘சந்திரயான்-2’ விண்கலம் தற்போது  மணிக்கு 39,240 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த வேகம், ஆகாயத்தில் ஒலி பரவும் வேகத்தைவிட கிட்டத்தட்ட 30 மடங்காக உள்ளது.  

விண்கலம் செல்லவேண்டிய வேகம் வரம்பு மீறக்கூடாது, அதே வேளையில் மெதுவாகவும் செல்லக்கூடாது. நிலவின் மேற்பரப்பிலிருந்து அந்த விண்கலம் சரியான தூரத்தில் இருக்கவேண்டும். இதில் சிறு தவறு ஏற்பட்டால்கூட ‘சந்திரயான்-2’ தோல்வியடையும்.

ஜூலை மாதம் 2ஆம் தேதியன்று ‘சந்திரயான்-2’ விண்கலம் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா நகரிலுள்ள விண்வெளி நிலையத்திலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்டது. இதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கான செலவு 1,000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  நிலவு பயணங்களுக்காக மற்ற நாடுகள் செய்யும் செலவைவிட இந்தத் தொகை வெகு குறைவு.