ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி அமைவதில் சிக்கல்

அமராவதியில் புதிய தலைநகரைக் கட்டியெழுப்பியது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம்.

இந்த நிலையில், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்று, அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவியில் அமர்ந்ததும் அமராவதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

 

இதையடுத்து, அமராவதி விஷயத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், “முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் மற்ற பகுதிகளில் கட்டுமானத்திற்கு நூறாயிரம் ரூபாய் செலவாகிறது எனில், அமராவதியில் இருநூறாயிரம் தேவைப்படுகிறது. ஆகையால், இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்,” என்று திரு சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமராவதிக்குப் பதிலாக பிரகாசம் மாவட்டம், தோனகொண்டாவில் தலைநகரை அமைக்கலாம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

அதுபற்றிக் கேட்டதற்கு, “தோனகொண்டா, அனகோண்டா என்பது போன்ற செய்திகளில் எல்லாம் உண்மையில்லை,” என்றார் அமைச்சர்.

இதனிடையே, அவரது கருத் துக்குத் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“தலைநகருக்கு அமராவதி ஏற்றதல்ல என்று அமைச்சர் சத்திய நாராயணா ஆதாரமில்லாமல் பேசுகிறார்,” என்று தெலுங்கு தேசம் சாடியுள்ளது.

முன்னதாக, உலக வங்கியும் சீனா ஆதரவுடன் இயங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் அமராவதி நகரைக் கட்டமைப்பதற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் முடிவைக் கைவிட்டன.