சிதம்பரத்தை ஐந்து நாட்களுக்கு விசாரணைக் காவலில் வைக்க அனுமதி கோரும் சிபிஐ

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐந்து நாட்கள் விசாரிக்கக் கோரி அந்நாட்டின் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கேட்டிருந்தது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட திரு சிதம்பரம் சிபிஐ தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணையில் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சிபிஐ, திரு சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் வழக்கறிஞர்களுடன் முன்னிலையானார்கள்.

சிபிஐ தலைமையகத்திற்குள் இருந்த ‘லாக்-அப் சுயிட்-3’ என்ற அறையில் ப. சிதம்பரம் நேற்றிரவைக் கழித்தார். தான் உறங்கி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று அவர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ தொடர்பான ஊழல் வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதி என திரு சிதம்பரம் கைதாவதற்கு முன்னதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், திரு சிதம்பரம் பலருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். இந்த மோசடி தொடர்பில் நடத்தப்பட்ட மாபெரும் சதித்திட்டத்தை வெளிப்படுத்தத் திரு சிதம்பரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகத் திரு மேதா கூறினார்.

திரு சிதம்பரத்தை ஐந்து-நாள் தடுப்புக்காவலில் வைக்க சிபிஐ கோரியதை எதிர்த்து வழக்கறிஞர் கபில் சிபல் அவர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினார். சிபிஐ சொல்வதெல்லாம் வேத வாக்கு ஆகிவிடாது என்று கூறிய திரு சிபல், நடந்ததாகக் கூறப்படும் குற்றச்செயலுக்குப் பத்தாண்டுக்குப் பின்புதான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதைச் சுட்டினார்.