இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள ஆயுள் தண்டனை குற்றவாளியான நளினி ஸ்ரீஹரிஹரனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விடுப்பு மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விடுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலாவதியாகும்.
கடந்த மாதம், தனது மகளின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நீதிமன்றம் நளினிக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பைக் கொடுத்திருந்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து ஜூலை 25ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பின்னர் நளினி தற்போது சத்துவாச்சாரியில் தங்கி வருகிறார்.
27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்த நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஆறு மாத விடுப்பைக் கேட்டிருந்தார்.
ஆயினும் தமிழ்நாட்டிலுள்ள தண்டனையின் தற்காலிக ரத்து தொடர்பான சட்டத்தின்படி குற்றவாளிக்கு அதிகபட்சமாக 30 நாள் விடுப்புதான் கொடுக்க முடியும் என்று அரசாங்க வழக்கறிஞர், நளினியின் நீதிமன்ற மனுவுக்கான விசாரணையின்போது கூறினார். இதனை ஏற்ற நீதிமன்றம், 30 நாள் முடிந்த பின்னர் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யும் என்று கூறியது.
1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் நளினி உட்பட எழுவர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆயுள் தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர்.

