ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்ககப்பட்டுள்ளன. பிரிவினைவாதிகள் சார்பாக பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவக் கண்காணிப்பு அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாகச் செல்லவேண்டும் என்று பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆங்காங்கே பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.
இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்துள்ள போலிசார் பேரணியைத் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் கேட்டுக் கொண்டால் அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் என வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜி-7 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச உள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறி உள்ளது.
அதேவேளையில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதி மீட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என ஏற்கெனவே இந்திய வெளியுறவு அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

