சோனியா காந்தி: மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்

புதுடெல்லி: மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துளன்ளார்.  

மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆம் பிறந்தநாளையொட்டி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோதே சோனியா இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் கொள்கையை மாற்ற விரும்புவதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர். தமது உரையில் மத்திய அரசையோ, பிரதமர் மோடியின் பெயரையோ நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்தார்.

“கடந்த 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதால் ராஜீவ்காந்தி ஆட்சி அமைத்தார்.  ஆனால் அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை,” என்றார் சோனியா காந்தி. ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆபத்தான நிலையில் வைக்க ராஜீவ் ஒருபோதும் விரும்பியதில்லை என்று குறிப்பிட்ட அவர்,  ராஜீவ்காந்தி தமது அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றார்.

“இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற செய்தியை ராஜீவ் மக்களுக்கு வழங்கினார். 

“அவர் பிரதமராக இருந்தபோது செய்தவற்றை வேறு யாராலும் செய்ய முடியாது,” என்றார் சோனியா காந்தி.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் மீது ஊழல் வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே சோனியா மிகுந்த ஆவேசத்துடன் பேசியதாகத் தெரிகிறது.

Loading...
Load next