நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க அரசு நடவடிக்கை

புதுடெல்லி: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்குமாறு அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் நெகிழிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

அவற்றில் 9,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் ட்ரா, நெகிழிக் கரண்டி, பை போன்ற 6 ஆயிரம் டன் பொருட்கள் மண்ணில் புதைந்து சுற்றுச்சுழலுக்குக் கேடு விளைவிக்கின்றன. 

இது தொடர்பாக சுதந்திரதினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார். 

அவரது அறிவுறுத்தலைத் தொடர்ந்து நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக குறிப்பிட்ட அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கூடி ஆலோசனை மேற்கொண்டனர். 

அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கிராமப்புறங்களில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் நெகிழி கலந்து அமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் இதை விட அதிகமாக 25 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கான இயக்கம் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு அமேசான்,  பிலிப்கார்ட் போன்ற இணையத்தள வணிக நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தவுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்