ஆங்கில நாளிதழ் தலைவர் வீட்டில் திடீர் சோதனை

ஹைதராபாத்: கனரா வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவற்றில் வாங்கிய கடன் மோசடி தொடர்பில் டெக்கான் குரோனிக்கல் என்ற ஆங்கில நாளிதழின் தலைவர், இயக்குநர் ஆகியோரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

நாளிதழின் தலைவர் வெங்கட்ராம ரெட்டி (படம்) , நிர்வாக இயக்குநர் விநாயக ரெட்டி ஆகியோரின் ஹைதராபாத், செகந்தராபாத் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது அசையா சொத்துகள், மின்னியல் கோப்பு ஆதாரங்கள், 5 லட்சம் ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டுக் கட்டுகள், இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடன் பெற்ற தொகை யாருக்கு மாற்றப்பட்டது என்று மின்னியல்  கோப்பு ஆதாரங்களைக் கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து இவர்கள் நிலுவை வைத்துள்ள தொகை தற்போது 8,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

“மேலும் வங்கிகளில் பொய் கணக்கு காண்பித்து கடன் பெற்றுள்ளதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டுள்ளது. “வாங்கியக் கடனை அவர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக  அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்,” என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2013ல் டெக்கான் குரோனிக்கல் நிறுவனத்தின் மீது சிபிஐ 2,323 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.