மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிவசேனா கட்சி சாடியுள்ளது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் செய்தி வெளியாகியுள்ளது.
முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள அச்செய்தியில், பிரதமர் மோடியின் கனவான நவீன இந்தியா, வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதாவின் நெருக்கமான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக சிவசேனா கருதப்படுகிறது. இந்நிலையில் மோடி இரண்டாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் சிவசேனா முதன்முறையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையில் தற்போது சில கட்டுரைகள், புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன.
இதற்கிடையே சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேவும் மோடி அரசை விமர்சித்து வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாகவே வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் பயிர் காப்பீட்டுத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
"இரண்டாண்டுகளில் இரண்டு கோடி பேர் வேலை இழந்த நிலையிலும் கூட அது குறித்துப் பேச யாரும் முன்வரவில்லை," என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

