3 துணை முதல்வர்கள்: எடியூரப்பா அதிருப்தி

3 துணை முதல்வர்கள்: எடியூரப்பா அதிருப்தி

2 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் 3 துணை முதல்வர்களை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் முதல்வர் எடியூரப்பா அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை அடுத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்மாதம் 20ஆம் தேதிதான் எடியூரப்பா அமைச்சரவையில் 17 பேர் இடம்பெற்றனர்.

அவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. மேலிடத்திடம் கலந்து ஆலோசித்த பிறகு துறைகள் ஒதுக்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 20 எம்எல்ஏக்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டுமென முதல்வர் எடியூரப்பாவிடம் வலியுறுத்தி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் அவர்களில் சிலர் கட்சி மாறவோ, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளவோ வாய்ப்புள்ளதாக முதல்வர் தரப்பில் அஞ்சுவதாகத் தெரிகிறது.

இதனால் அதிருப்தியாளர்களைச் சமாளிக்க எடியூரப்பா திணறி வருவதாக கர்நாடகா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 3 பேரைத் துணை முதல்வராக்க வேண்டும் என பாஜக மேலிடம் முதல்வர் எடியூரப்பாவிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், ஆனால் அவர் இதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டாமென அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சாதி வாரியாக 3 பேரைத் தேர்ந்தெடுத்து துணை முதல்வர்களாக்கினால்தான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என பாஜக தலைமை கருதுவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் முதல்வர் எடியூரப்பா குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் புகார் செய்யும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் முதல்வர் எடியூரப்பா வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள தாகத் தெரிகிறது.

எடியூரப்பாவும் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகத்

தகவல்கள் தெரிவிக்கின்றன.