ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், காஷ்மீரின் தெற்கே அனந்த்நாக் மாவட்டத்தில், ஸ்ரதிபோரா உரன்ஹாலில், சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
அவ்வழியே கனரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 42 வயது நூர் முகம்மது தார் என்பவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கல்வீச்சில் அவர் காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பொதுமக்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசுவதாக போலிசார் குற்றம் சாட்டினர்.

