கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆகிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அவர் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீதும் மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ப.சிதம்பரத்தின் விசாரணைக் காவலை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய புலனாய்வுத் துறை மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்படவில்லை என்றால், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்.
இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு முன்பினை வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
அத்துடன் ப.சிதம்பரத்தைக் கைது செய்யவும், மத்திய புலனாய்வுத் துறை காவலில் வைக்கவும் தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை இன்று வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

